அரசு நிலங்களில் ஆக்ரமணங்களை அகற்றும் நடைமுறைகள்: • அரசு நிலங்களில் ஏற்படும் ஆக்ரமணங்களின் பேரில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 1905-ஆம் ஆண்டின் தமிழ்நாடு நில ஆக்கிரமணச் சட்டம்(தமிழ்நாடு சட்டம் III-1905) மற்றும் வருவாய் நிலை ஆணை எண் 26-இல் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
 • அரசாணை(பல்வகை) எண் 26-இல் பத்தி 7-இன் கீழ் உள்ள இணைப்பு 31,32-இல் விரிவான நடைமுறை அறிவுரைகளும், படிவங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
 • நில ஆக்ரமணங்களைக் கண்டறிதல் ஒவ்வொரு மாதமும் பயிராய்வுப் பணியை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர் புறம்போக்கு நிலங்களில் ஏதேனும் ஆக்ரமணம் செய்யப்பட்டதை கண்டறிந்தால் உடனடியாக அடங்கலில் அதனைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ‘B’மெமோ இரு நகல்கள் எழுதி பிரிவு-7 நோட்டீஸையும் இரு நகல்களையும் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும்.

  சில விதி விலக்குகள்

 • நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வளத்துறைக்குச் சொந்தமான பல்வகை நிலங்களிலும் ஏற்படும் ஆக்ரமணங்களை அந்த்த் துறையே அகற்றிக் கொள்ளலாம்.
 • இதற்கு வருவாய்த் துறையினர் ‘B’ மெமோ வழங்கக் கூடாது என 2898 வருவாய் நாள் “13-12-1969” மற்றும் அரசாணை எண் 2021 வருவாய்த் துறை நாள் 25-09-1976-இல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
 • உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்களில் ஏற்படும் ஆக்ரமணங்களையும் அவர்களே அகற்றிக் கொள்ளலாம் என வருவாய் நிலை ஆணை எண் 26-10, 26-11-இல் கூறப்பட்டுள்ளது.
 • துறைமுக எல்லைக்குள் இருக்கும் அரசினர் நிலங்களில் உள்ள ஆக்ரமணங்கள் குறித்த அறிக்கையை துறைமுக அலுவலர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும்.இதே போல் இரயில்வே நிலங்கள் குறித்து 1905-ஆம் ஆண்டின் சட்ட்த்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.வருவாய் நிலை ஆணை எண் 26-9, 26-12.
 • நில ஆக்ரமணச் சட்டம் 1906-இன் 5-ஆவது பிரிவின் கீழ் ஆக்ரமண நிலத்திற்கு ஏன் தீர்வை விதிக்கக் கூடாது என்பதற்கும் ஆக்ரமணத்தை ஏன் அகற்றக் கூடாது என்பதற்கும் காரணம் தெரிவிக்குமாறு பிரிவு 7-நோட்டீஸை வருவாய் ஆய்வாளர் அங்கீகரித்து ஒப்பமிட்டபின் அதனை சம்பந்தப்பட்ட ஆக்ரமணதாரர் வசம் ஒப்புவிக்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
 • பிரிவு 7-நோட்டீஸில் கண்ட காலவரையறை முடிந்தவுடன், ஆக்ரமணத்தைப் பார்வையிட்டு ஆக்ரமணம் ஆட்சேபனையுடையதா, ஆட்சேபனையற்றதா என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியருக்கு அறிக்கையை அனுப்புவார்.
 • வட்டாட்சியர் ‘B’ மெமோ பேரில், சம்பந்தப்பட்ட ஆட்சேபணைக்குரிய ஆக்ரமணத்தைப் பார்வையிட்டு அதனை அகற்றுவதற்கு(பிரிவு 6-இன் படி) நோட்டீஸ் அனுப்பி ஆக்ரமணத்தை அகற்றுவதற்கு ஆணை பிறப்பிப்பார்.
 • அதில் குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் ஆக்ரமணத்தை அகற்ற வேண்டும். பிரிவு(1)-இன் கீழ் அனுப்பப்படும் ஆணையுடன், ஆக்ரமணம் செய்துள்ளவர், அந்நிலத்தில் பயிரிட்டுள்ள பயிர்களையும், விளைபொருட்களையும், கட்டடங்களையும் ஒரு குறிப்பிட்டுள்ள தேதிக்குள் அகற்ற வேண்டுமென்று அவருக்குத் தெரிவிக்கக் கூடிய அறிவிப்பை வழங்குவார்.
 • அந்தத் தேதிக்குப் பின்னரும் ஆக்ரமணம் அகற்றப்படாதிருந்தால் ஆக்ரமணம் செய்யப்பட்ட நிலத்தை கையகப்படுத்த, அதனை பறிமுதல் செய்ய வட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்கலாம். பயிர்கள் அறுவடை செய்யும் நிலையிலிருந்தால் அதனை அறுவடை செய்வதற்கு வாய்ப்புகள் அளித்து, அதன் பிறகு ஆக்ரமணத்தை கிராம நிர்வாக அலுவலர் அப்புறப்படுத்த வேண்டும். (வருவாய் நிலை ஆணை எண். 26-7). மீண்டும் அதே நபர் ஆக்ரமணம் செய்ய முற்பட்டால், அவர் மீது காவல்துறையில் புகார் செய்து குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கூறலாம்.

  ஆக்ரமணங்களை அகற்றும் அதிகாரம் உள்ளவர்

 • பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளிலுள்ள அரசுப் புறம்போக்கு நிலத்திலுள்ள ஆக்ரமணங்களை அகற்ற வருவாய்க் கோட்ட அலுவலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
 • இரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களின் ஆக்ரமணங்களை இரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்ட பின்னர் அதனை அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டியது வருவாய் அலுவலரின் கடமையாகும்.
 • கோயில் புறம்போக்குகளில், ஏதேனும் ஆக்ரமணம் ஏற்பட்டால் அதனை அவ்வப்போது தெரிவித்து அகற்ற நடவடிக்கையெடுக்க வேண்டியது கிராம நிர்வாக அலுவலரின் கடமையாகும்.
 • சில கிராமங்களில் பூமியில் உள்ள கால்வாய், மழைநீர் செல்லும் பாதை, நடைபாதை மற்றும் வண்டிப்பாதை ஆகிய விவரங்கள் கிராம வரைபடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். பட்டா நிலங்களில் குறிப்பிடப்பட்ட பாதைகளை எவ்வித காரணத்திற்காகவும் பட்டாதாரர் தடுக்க இயலாது. அவர் அவ்வாறு தடுத்தால் தமிழ்நாடு நில ஆக்ரமணச் சட்டம் 1905 விதிமுறைகளை அனுசரித்து ஆக்ரமணத்தை அகற்ற வேண்டும்.
 • தமிழ்நாடு நில ஆக்ரமண திருத்தச் சட்டம் 1996-இன் படி ஆக்ரமண விஷயங்களில் உரிமையியல் நீதிமன்றங்கள் தலையிட முடியாது, உயர்நீதி மன்றம் மட்டுமே தலையிட முடியும்.
 • மிழ்நாடு பொது இட(அங்கீகரிக்கப்படாத ஆக்ரமணதாரர்கள் அப்புறப்படுத்துதல்) சட்டம் 1976 :
 • அரசு உபயோகத்திலிருக்கும் கட்டடங்கள், நிலங்கள் ஆகியவற்றில் ஏற்படும் ஆக்ரமணங்கள் அனைத்தும் இச்சட்ட வரன்முறையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இச்சட்ட்த்தின்படி சென்னை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் மற்ற மாவட்டங்களிலுள்ள வருவாய் கோட்ட அலுவலர்களே நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் ஆவார்.
 • பொது இடங்களை ஆக்கிரமித்துள்ள நபர்/நபர்களுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணையை 10 நாட்கள் கால அவகாசத்துடன் முதலில் வழங்க வேண்டும், அவர்கள் பதில் கொடுப்பின்,அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தி அதன் பின் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கலாம்.
 • நில ஆக்ரமண சட்ட்த்தின்படி நடவடிக்கை நிலுவையில் இருந்தபோதிலும் அந்தப் பசலியின் இறுதியில் வட்டாட்சியரால் நில ஆக்ரமணச் சட்டம் 1905-இன் படி அபராதமும் விதிக்கலாம்.(விவரங்கள் கிராமக் கணக்கு எண் 7-இல் தரப்பட்டுள்ளது)(சட்டப்பிரிவு 5).